தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற மானியம்

தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற மானியம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-09-16 18:45 GMT

வேலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்ற மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானியம்

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைதுறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மானியம், கடனுதவி, விதைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளது. அந்த நிலங்களை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவசாய நிலமாக மாற்ற

அதன்படி தரிசு நிலங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றவும், விவசாய நிலமாக மாற்றவும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பயிறு வகை பயிர்கள், சிறு தானியம் விதைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. வேலூர் வட்டாரத்தில் பெருமுகை, சிறுகாஞ்சி, அன்பூண்டி, கருகம்புத்தூர் ஆகிய பஞ்சாயத்துகளில் இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் சில பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

எனவே தரிசு நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும் விவசாய நிலமாக மாற்ற விரும்பினால் அருகில் உள்ள வேளாண் அலுவலரை அணுகலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்