மானிய உதவியுடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்-கலெக்டர் தகவல்
தோட்டக்கலைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து, விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்
தோட்டக்கலைத்துறையின் சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து, விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சொட்டு நீர் பாசனம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் சுவை தானிய பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதற்காக, சிவகங்கை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு 2,300 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.1,830 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிறு,குறு விவசாயிகள் 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.50 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும், சொட்டு நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரமும், மற்றும் தரைநிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரம் மானியமும் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது.
பதிவு செய்யலாம்
எனவே, நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகள் இவை தொடர்பாக விவரங்களை பெறுவதற்கு ஏதுவாக, அலைபேசி எண்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில், சிவகங்கை வட்டாரத்திற்கு 9489505957 என்ற எண்ணிலும், காளையார்கோவில் வட்டாரத்திற்கு 8508130960 என்ற எண்ணிலும், திருப்புவனம் வட்டாரத்திற்கு 9626006374 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.