குமரியில் 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு;4,886 பேர் எழுதினர்

குமரியில் 6 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4,886 பேர் எழுதினர்.

Update: 2022-06-25 18:18 GMT

நாகர்கோவில்,

குமரியில் 6 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4,886 பேர் எழுதினர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு போலீஸ் துறையில் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக குமரி மாவட்டத்தில் தோவாளையில் 2 இடங்களிலும், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, இறச்சகுளம், சுங்கான்கடை ஆகிய 4 இடங்களிலும் என மொத்தம் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத 5,888 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 மையங்களிலும் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30 மணி வரை மெயின் தேர்வு நடந்தது. பின்னர் 2-வது ஷிப்டாக பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தேர்வு நடந்தது. நாகர்கோவிலில் உள்ள மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தேர்வு எழுதியவர்களின் தேர்வு சீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையத்தில் செய்யப்பட்டிருந்த குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.

1,002 பேர் தேர்வு எழுதவில்லை

முன்னதாக தேர்வு எழுதுவதற்காக காலை 7 மணிக்கே வந்திருந்தனர். தேர்வு மையத்துக்கு இளம்பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்ததை காண முடிந்தது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செல்போன், கால்குலேட்டர், புளூடூத் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தேர்வு எழுத 5,888 பேர் விண்ணபித்திருந்த நிலையில் நேற்று 4,886 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1,002 பேர் தேர்வு எழுத வரவில்லை.தமிழகம் முழுவதும் 197 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 221 ஆண்கள், 43 ஆயிரத்து 949 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் எழுதினர்.

Tags:    

மேலும் செய்திகள்