திருப்பூரில் 1,200 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றது.

இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் 1,200 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றது. ஊர்வலத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-03 21:21 GMT


இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் 1,200 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றது. ஊர்வலத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் 1,200 விநாயகர் சிலைகள் கடந்த மாதம் 31-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சில பகுதிகளில் இரவு நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார்கள்.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலம் நேற்று மாலை திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் தாராபுரம் ரோடு வெள்ளியங்காடு ஆர்ச் அருகே ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி ஆம்ஸ்ட்ராங்க் பழனிச்சாமி, இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அலங்கார வாகனம்

ஊர்வலத்தில் காவிக்கொடி ஏந்தி இந்து முன்னணி தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். சிவன் பார்வதி அலங்கார வாகனம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி ஊர்வலம் புறப்பட்டது. மேடையில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றார்கள்.

மேளதாளங்கள் முழங்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றன. ஊர்வலம் கரட்டாங்காடு, பெரிச்சிப்பாளையம், திரு.வி.க.நகர், வெள்ளியங்காடு நால்ரோடு, தென்னம்பாளையம், பழைய பஸ் நிலைய மேம்பாலம், பூக்கடை முக்கு, டைமண்ட் தியேட்டர் வழியாக பொதுக்கூட்டம் நடந்த ஆலாங்காடு சென்றடைந்தது.

புதிய பஸ் நிலையம்

இதுபோல் புதிய பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சிவன் ஒரு கையில் உடுக்கையும், மற்றொரு கையில் சூலாயுதம் ஏந்தி நடப்பது போல் பிரமாண்ட அலங்கார வாகனம் சென்றது. அதுபோல் பார்வதி சிங்கத்தின் மீது அமர்ந்தபடி உள்ள அலங்கார வாகனம் சென்றது.

இந்த ஊர்வலம் 60 அடி ரோடு, எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு, பிரிட்ஜ்வே காலனி, மில்லர் பஸ் ஸ்டாப், மேம்பாலம், நடராஜா தியேட்டர் ரோடு வழியாக ஆலாங்காட்டுக்கு வந்தது. திருப்பூர் மங்கலம் ரோடு செல்லம்நகர் பிரிவில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அ.தி.மு.க. கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு கே.டி.சி.பள்ளி வீதி, வேப்பங்காடு பங்களா, மேற்கு பிள்ளையார் கோவில்வீதி, ஏ.பி.டி.ரோடு வழியாக ஆலாங்காட்டுக்கு வந்தது. ஊர்வலத்தில் கண்கவர் அலங்கார வாகனங்கள், கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகளை மக்கள் திரளாக வந்து கண்டுகளித்தனர்.

வாகன நெரிசல்

வாகனங்கள் அனைத்தும் ஆலங்காட்டுக்கு வந்ததும், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முக்கிய சாலை வழியாக ஊர்வலம் சென்றதால் மாநகரில் மாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்