'தீம் பார்க்' நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி

Update: 2022-06-06 15:59 GMT

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி அருகே 'தீம் பார்க்' நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவர்

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா (38). இவர்களது மகன்கள் சியாம் ராபின்சன் (16), ஐசக் (12). இதில் சியாம் ராபின்சன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், ஐசக் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பாஸ்கர் நேற்று வழக்கம்போல் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் ஸ்டெல்லா தனது மகன்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறையில் தனது வீட்டின் அருகில் வசித்து வருபவர்கள் உடன் 'தீம் பார்க்' செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஸ்டெல்லா தனது மகன்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ளவர்களுடன் திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிபாளையம் நால்ரோட்டை அடுத்த எஸ்.பெரியபாளையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 'ஜி ரெசார்ட்' 'தீம் பார்க்'குக்கு சென்றார். 'தீம் பார்க்' சென்ற உற்சாகத்தில் சியாம் ராபின்சன் அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் இதனை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ஸ்டெல்லா தனது மகன் சியாம் ராபின்சன் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது மகனை தேடினார். அப்போதுதான் சியாம் ராபின்சன் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவன் பலி

அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சியாம் ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் சியாம் ராபின்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையில்'தீம் பார்க்' சென்று உற்சாகமாக விளையாட நினைத்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்ததை அடுத்து 'தீம் பார்க்' நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில் முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் 'தீம் பார்க்' கை நிரந்தரமாக மூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மேலும் பல உயிர்பலிகள் நடப்பதை தடுக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்