சர்க்கரை ஆலையில் ஆய்வு

சர்க்கரை ஆலையில் புனரமைப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்

Update: 2022-09-02 17:35 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி பெயரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஆரம்ப கால கட்டத்தில் லாபத்தில் இயங்கி வந்தது. அதன்பிறகு நஷ்டத்தில் இயங்கியதால் ஆலை மூடப்பட்டது. ஆலையை சீரமைத்து மீண்டும் திறக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிதி ஒதுக்கினார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் இந்த ஆலையில் எந்த புனரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அரசு சார்பில் அமைக்கப்பட்ட புனரமைப்பு குழுவின் சிறப்பு செயலாளர் ஆபிரகாம் தலைமையில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் உள்பட அதிகாரிகள் பலர் சர்க்கரை ஆலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் (சர்க்கரை) அன்பழகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் இயக்குனர் அண்ணாதுரை, ஆய்வு குழு உறுப்பினர்கள், சர்க்கரை ஆலையின் கூடுதல் இயக்குனர் சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, வேளாண்மை இணை இயக்குனர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணம், சத்தியசீலன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்