மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

வாணியம்பாடி மற்றும் ஏலகிரி அரசு மருத்துவமனைகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

Update: 2023-07-09 18:21 GMT

மருத்துவமனையில் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டார்.

மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதிதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணி, டாக்டர்கள் செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஏலகிரி

அதேபோன்று ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், அரசு டாக்டர் பிரதீப் ராஜ் மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்