வளர்ச்சி பணிகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Update: 2023-03-15 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வோனா கலந்து கொண்டு துறை வாரியாக நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் கலைஞா் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், விளையாட்டுத்திடல் மற்றும் பேரிடர் மேலாண்மை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், தேவையான நிதிநிலைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வு

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிவகங்கை நகராட்சி பகுதியிலுள்ள ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மருந்து கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள சிறப்பு உணவுப்பொருட்கள் குறித்தும், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிகண்டம் ஊராட்சி மற்றும் மீனாட்சிபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், முத்துப்பட்டி ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்