அரசு கல்லூரியை பெற்றோர்களுடன் மாணவர்கள் திடீர் முற்றுகை

திண்டிவனம் அரசு கல்லூரியை பெற்றோர்களுடன் மாணவர்கள் திடீர் முற்றுகை படிக்க இடம் கிடைக்காததால் ஆத்திரம்

Update: 2022-09-30 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இடம் கிடைக்காத மாணவ-மாணவிகள் நேற்று தங்கள் பெற்றோருடன் வந்து கல்லூரியை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது படிப்பதற்கு இடம் கேட்டு கோஷம் எழுப்பினர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது நாங்கள் ஏழைகள் என்பதால் தான் அரசு கல்லூரியை தேடி வருகிறோம். வசதி இருந்தால் தனியார் கல்லூரிக்கு சென்றிருப்போம். வசதி இல்லாத எங்களுக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிப்பதற்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், ஆனந்தராசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தற்போது கல்லூரியில் படிக்க இடம் பெற்றவர்கள் யாராவது மாறுதலாகி சென்றால் அந்த இடத்தை காத்து இருக்கும் பட்டியலில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து சீட்டு வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்