போதையால் பாதை மாறும் மாணவர்கள்
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன. இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
விதிகளால் என்ன பயன்?
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போதைப்பொருட்கள்
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
குடிபோதை என்பது ஒரு மனநோய்
புதுக்கோட்டை குடிபோதை மீட்பு மைய சிகிச்சை மருத்துவர் பஷீர் அகமது:- ''போதையை பழக்கமாக வைத்திருப்பவர்கள், அதற்கு அடிமையாக இருப்பவர்கள் என 2 வகை உள்ளது. இதில் எப்போதாவது, வாரத்திற்கு ஒரு முறை என மது அருந்துபவர்களை போதை பழக்கமுடையவர்கள். அதேபோல தினமும் தன்னால் மது குடிக்காமல் இருக்க முடியாது, போதையை பயன்படுத்தாமால் இருக்க முடியாது என்பது போதைக்கு அடிமையானவர்கள். இவர்களுக்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்பது அலோபதி, ஆயுர்வேதம் என 2 வகையில் உள்ளது. இதில் அலோபதி சிகிச்சை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகும். ஆயுர்வேதத்தில் குடிப்பவர்க்கு தெரிந்தேயும், தெரியாமாலும் மருந்து கொடுக்கப்படுகிறது.
இதில் மருந்து என்பது மூலிகை பொடியை போன்றதாகும். நாங்கள் ஆயுர்வேத சிகிச்சையை அளித்து வருகிறோம். குடிபோதையில் உள்ளவர்களை மீட்க அவர்களுக்கு தெரியாமலே மருந்து உணவில் கலந்து கொடுக்க அறிவுறுத்தப்படுவது உண்டு. இதில் தினமும் மது அருந்தி கொண்டே இருந்தாலும், இந்த மருந்தை உட்கொள்வது அவர்களுக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் ஆல்கஹால் அவர்களது உடம்பில் ஏற்காமல் வாந்தி ஏற்படும். அதன்பின் அவர்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள். இதில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. குடிப்பழக்கத்தை இப்படி விட்டவர்கள் பலர் உள்ளனர். இதேபோல தெரிந்தே மருந்து உட்கொள்பவர்களில் சிலர் மீண்டுள்ளனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் மீண்டும் மது அருந்த தொடங்கி விடுகின்றனர்.
குடிபோதை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பெரும்பாலானோர் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான். சுமார் 500 பேருக்கு சிகிச்சை அளித்திருப்போம். இதில் 2 பெண்கள் அடங்குவார்கள். அவர்களும் சிகிச்சைக்கு பிறகு சீராகியுள்ளனர். குடிப்பழக்கத்தை விடும் போது இரவில் தூக்கமின்னை, மனப்பதற்றம் ஏற்படுவதை தவிர்க்கவும் மருந்து கொடுக்கப்படும். 4 மாத காலம் மருந்து கொடுப்பதில் சரியாகிவிடும். குடிபோதை என்பது ஒரு மனநோய். அதற்கு தகுந்த மூலிகை மருந்து அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.''
இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறி
பரம்பூரை சேர்ந்த முகமது இஸ்மாயில்:-
இன்றைய மாணவர் சமுதாயம் நாளைய இந்தியாவின் எதிர்காலம். அந்த வகையில் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும், குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாணவனின் பங்கும் முக்கியமானதாகும். ஆனால் சமீப காலமாக கஞ்சா, மது, புகையிலை போன்ற போதை பொருட்களால் இன்றைய இளம் தலைமுறையினரும், மாணவர் சமுதாயமும் சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறது.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பலர் கஞ்சாவுக்கும், மதுவுக்கும் அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து கொள்கிறார்கள். இதுபோன்ற தவறான பழக்க வழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவது, ஆசிரியர்களை கேலி செய்வது, தாக்குவது போன்ற அநாகரீகமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மாணவர்கள் மற்றும் இன்றைய இளம் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, குடும்பத்தில் பெற்றோர்களும் சரியாக கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய இளம் தலைமுறையினர் தடம் மாறி செல்வதை தடுக்க சரியான தீர்வாகும்.
பெற்றோர்களாக வழிநடத்த வேண்டும்
விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலகிருஷ்ணன்:-
மாணவர்களுக்கு போதை பழக்கம் இருந்தால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் உள்ளது. அவ்வாறு மாணவர்களுக்கு போதை பழக்கம் இருப்பதை கண்டறிந்தால் அதனை நாம் உளவியல் ரீதியாக அனுக வேண்டும். நமது பள்ளிகளில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையானது போல் தெரியவில்லை. அரசும் கூட போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாலும் கூட மாணவர்களிடையே தொடர்ந்து ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக போதை பழக்கம் சார்ந்த கருத்துகளை சொல்ல வேண்டும். தற்போது இப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகவில்லை என்று தான் நான் சொல்வேன். ஆனால் ஒருசில மாவட்டங்களில் மாணவர்களிடையே போதை பழக்கம் உள்ளது. அதனை நாம் சமுக வலைதளங்களில் பார்க்கிறோம். மதுக்கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வழங்க தடைவிதித்துள்ள போதும், அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என தெரியவில்லை. அதற்கு காரணம் வெளியில் உள்ள மது புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது. வெளியிலிருந்து தீயபழக்கத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வந்தவுடன் அவர்களின் ஒழுங்கு கட்டுப்பாடு மாறிவிடும். சமீபத்தில் வடமாநிலத்தில் தலைமை ஆசிரியரை மாணவர் ஒருவர் போதையில் தாக்குவதற்கு முற்பட்ட சம்பவம் கூட நிகழ்ந்துள்ளது. எனவே ஆசிரியர்கள், இரண்டாம் நிலை பெற்றோர்களாக இருந்து மாணவர்களை வழிநடத்த வேண்டும்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
விராலிமலையை சேர்ந்த வக்கீல் வீரமணி:-
மதுவினால் மாணவர் சமுதாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் போதை பழக்கத்திற்கு அடிமையானது தெரிந்தால் உடனே அவற்றின் தீமைகள் பற்றி பேசி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்பது அரசு விதி. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு மது கிடைப்பது எப்படி என்பது அனைவரின் மத்தியிலும் கேள்வியாக உள்ளது. இந்தியாவில் 12.7 சதவீதம் பள்ளி மாணவர்கள் மது அருந்துகின்றனர். அதிகமாக குடிப்பது மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்று புள்ளி விபரம் கூறுகின்றது. மேலும் மாணவர்களுக்கு மன அழுத்தம், கோபம், இயலாமை, போன்ற காரணிகளால் மது அருந்தும் சிலர் நாளடைவில் மதுவிற்கு அடிமையாகின்றனர். எனவே மன அழுத்தம் ஏற்படும்போது அதற்கான மாற்று வழிகளை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். மது அறக்கன் பிடியில் சிக்கி எத்தனையோ இளம் தலைமுறையினர் மன்னோடு மன்னாக சிக்கி வருகின்றனர். அரசு சார்பில் போதைப்பழக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், இதுகுறித்து மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுய கட்டுப்பாடு அவசியம்
கறம்பக்குடி ஆத்தங்கரைவிடுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கமலக்கண்ணன்:- நாகரீகம், கொண்டாட்டம் என்ற பெயரில் நகர பகுதி மாணவர்களிடம் உருவாகிவரும் போதை கலாசாரம் மாணவர்களின் நன்மதிப்பை குறைப்பதாக உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் கல்லூரி பருவம் முக்கியமானது. எதிர்கால திட்டமிடல் இங்கிருந்தே தொடங்குகிறது. எனவே கவனமாகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே நாம் விரும்பிய நிலையை எட்ட முடியும். சில பள்ளி மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாகி வருவது வேதனையாகவும், அவமானமாகவும் உள்ளது. சந்தோஷத்தையும், கொண்டாட்டத்தையும் வேறு வகையில் வெளிபடுத்தலாம். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு தனி திறமை உள்ளது. அதை அடையாளம் கண்டு வெளிச்சப்படுத்துவது பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் தேடித்தரும். மாணவர்கள் அறிவுசார்ந்த தேடல்களை வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் நட்புடன் கண்காணிக்க வேண்டும்.
மதுபானம் எப்படிக் கிடைக்கிறது?
தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன்:-
இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் நல்லப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.