போதையால் பாதை மாறும் மாணவர்கள்
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
விதிகளால் என்ன பயன்?
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போதைப்பொருட்கள்
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது. போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
மனநல ஆலோசகர் சங்கமித்ரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிப் புரிய வைக்க வேண்டும்.
கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லிப் புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.
சடங்காக மாறியது
தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் வ.முருகன்:- சீருடையில் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள், கஞ்சா, மதுபானம் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அவற்றை அரசு கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வகுப்பறையிலேயே மாணவர்கள் மது அருந்தும் நிலையிலும், கஞ்சா போதையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது, கண்டிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பெற்றோர்களும் வீட்டில் குழந்தைகளை கண்டுகொள்ளாத நிலை நிலவி வருகிறது. வீட்டிற்கு ஒரு மகன், ஒரு மகள் என்ற நிலை இருப்பதால் அவர்களை கண்டிக்க முடியாத நிலை தொடர்கிறது. ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை தவிர், நல்ல கல்வி என்னும் பாதையால் நிமிர் என்பதை இன்றைய மாணவர்களுக்கு பாடத்துடன் ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். இன்று நடக்கும் கொலை, கொள்ளை மற்றும் தற்கொலை எல்லாம் போதை பழக்கத்தால்தான் நடக்கிறது. அப்துல் கலாம் கண்ட கனவு நனவாக வருங்காலத்தில் மாணவ கண்மணிகள் வாழ்க்கை வெற்றி பாதையில் செல்ல தவறான பழக்கம் உன்னை சுண்டி இழுக்கும் மயங்காதே, தயங்காதே, அந்த பக்கமே போகாதே என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
கே.வி.குப்பம் அருகே உள்ள தொண்டான்துளசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெ.உமாபதி:- மாணவர்களின் போதை பழக்கம் என்பது சமுதாயத்தில் அவர்கள் காணும் இடங்களிலோ, பெற்றோரிடம் இருந்தோதான் தொடங்குகிறது. 10 பேர் கூட்டாக ஓரிடத்தில் சேர்ந்தால் அது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், விருந்து நிகழ்ச்சியாக இருந்தாலும் போதை பொருள்களை வாங்கிக் கொடுப்பது ஒரு சடங்காகவே மாறி உள்ளது. இவை இல்லாமல் பொதுவான நிகழ்ச்சிகளில், பொழுது போக்காகக்கூட போதை பழக்கம் தொற்றிக் கொள்கிறது. முன்பெல்லாம் ஊருக்கு அஞ்சி மறைவாக குடித்துவிட்டு வருபவர்கள் கூட இப்போது, ஊரறிய தெருவின் ஓரங்களில் பலரும் பார்க்கும் படியாக குடிப்பதை ஒரு நாகரிகமாகவே எண்ணுகிறார்கள். வயதானவர்கள் மாணவர்களிடம் பணம் கொடுத்து போதைப் பொருள்களை வாங்கி வரச்செய்கிறார்கள். இப்படி பழக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு நாம் குடித்துதான் பார்ப்போமே என்று போதை வழியில் விழுகின்றனர். இந்த தவறான பழக்கத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் அடிமை ஆகிறார்கள். இதனால் குடிக்க பணம் இல்லாத போது பெற்றோர்களை மிரட்டுவது, திருடுவது, கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது போன்ற பல தீய வழிகளில் பணத்தை சம்பாதிக்கிறார்கள். போதை பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்கள் கண் மறைவாக அதை பயன்படுத்துவது சமுதாயத்துக்கு நல்லது. விழிப்புணர்வு பிரசாரங்களால் மனமாற்றம் ஏற்படுவதற்கான வயதோ, அதற்கான பக்குவமோ, வாழ்க்கை அனுபவங்களோ மாணவர்களிடையே இல்லை. இந்த பழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம், இருண்ட காலமாக மாறிவிடும். போதை பொருட்கள் எளிதில் கிடைக்கும் நிலையை அதிரடியாக அறவே நீக்கிவிட்டாலே மாணவர்களை எளிதில் காப்பாற்ற முடியும்.
முழுமையாக ஒழிக்க வேண்டும்
திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயகாந்தம்:- போதை, மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை பார்த்து ஒரு சில மாணவர்கள் தடம் மாறி இருக்கலாம். அது கொரோனா காலத்தில் இருந்திருக்கலாம். தற்போது மாணவர்கள் மது போதை போன்ற தவறான பழக்கத்திற்கு செல்வது குறைந்துள்ளது. போதை, புகை உள்ளிட்ட பழக்கவழக்கங்களிலிருந்து மாணவர்களை மீட்க அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் தோறும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்க அரசு தடை விதித்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
திருப்பத்தூர் அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ஆர்.மோகன்:- தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் போதை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மது, கஞ்சா, சாராயம் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள் பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை முழுமையாக ஒழித்திட வேண்டும். இல்லை எனில் இளைஞர்கள், மாணவர்கள் இதுபோன்ற பாதிப்பில் சிக்காதவாறு தடுப்பதற்கு நடவடிக்கைகளை அரசு எடுக்க முன் வர வேண்டும்.
ஆற்காடு தனியார் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அலுவலர் கே.வேலாந்தன்:- எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை நாங்கள் நாள்தோறும் கண்காணித்து வருகிறோம். ஏதாவது சந்தேகப்படும்படியாக மாணவர்கள் காணப்பட்டால் அவர்களுடைய ஸ்கூல் பேக் மற்றும் அணிந்திருக்கும் உடைகளை சோதனை செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்துகிறோம். பெற்றோர்களும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். போதை பொருட்கள் ஆற்காடு பகுதியில் சிறிய பெட்டிக்கடைகளில் கூட விற்பனை செய்கிறார்கள். இதனை காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைபொருள் உற்பத்தி செய்யக்கூடிய இடங்களை கண்டுபிடித்து அதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி அரசு தலையிட்டு போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
கண்டிக்க முடிவதில்லை
திருவண்ணாமலை முதுநிலை ஆசிரியர் சை.அ.அமானுல்லா:- போதை பொருட்களை நகர்ப்புற மாணவர்களை போல கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே படித்த போது தவறான நட்புகளோடு இணைந்து இந்த போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். நூற்றுக்கு 15 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்தில் உள்ளனர். குறிப்பாக பிளஸ்-1 மாணவர்களிடம் தான் இந்த போதை பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இவர்களுக்கு வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மூலமாகவே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
போதை பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. இவர்களை கண்டறிந்து தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், காவல்துறை மூலமாக விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்குகிறோம். இவர்களை தண்டிக்க முடிவதில்லை. காரணம் தண்டிக்கும்போது முற்றிலுமாக அவர்கள் கல்வியை தொடர்வதை நிறுத்துகின்றனர் பெற்றோர்களும் கண்டித்தால் எங்கே விபரீத முடிவு எடுத்து விடுவார்களோ என்று பயந்து தயக்கம் காட்டுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை தினமும் கண்காணித்து ஆசிரியர்களோடு இணைந்து செயல்பட்டால் தான் வருங்கால மாணவர் சமுதாயத்தை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க முடியும்.
புகார்கள் வரவில்லை
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி:- வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்க அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தவிர பள்ளிகளில் போலீஸ் கிளப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், போலீசார் உறுப்பினராக உள்ளனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினாலோ அல்லது பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்றாலோ போலீஸ் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் மாணவர்கள், போலீசார் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் மற்றும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
பள்ளியின் அருகே உள்ள கடைகளில் இங்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்று பதாகை வைக்கும்படி கூறி உள்ளோம். மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவது சக மாணவர்களுக்கு தெரிய வந்தால் அதுகுறித்து உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக எவ்வித புகார்களும் இதுவரை வரவில்லை.
கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தரணிபாய்:- இந்த காலத்தில் ஒரு சில மாணவ- மாணவிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகி விடுகின்றனர். எங்க காலத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்கள் தவிர மற்ற பகுதிகளில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். தற்போது அப்படி இல்லை. சில பெற்றோர்களின் கவனிப்பின்மை, பொறுப்பின்மை இன்றைய இளைஞர்கள்தவறான பாதைக்கு செல்கிறார்கள். போதைப்பொருள் மயக்கத்தில், தான் செய்வதை அறியாமல் தவறான செயல்களில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நாசமாக்குகின்றார்கள். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு தடை செய்தால் மட்டும் போதாது. போதைப்பொருள் விளையும் இடத்தையும், விற்பனை செய்வதையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் பஸ்சில் தொங்கிக்கொண்டும், பெண்களை கேலி செய்வதும், பிறரை ஏளனமாக பேசுவதும், கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் நடக்கிறது. எனவே போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் நல்லப் பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.