ரூ.1 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவர்கள்
வேலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வேலூரில் செல்போனுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மாணவன் மாயம்
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மளிகை கடை அதிபர். இவரது மகன் கொணவட்டம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்றுமுன்தினம் இரவு மாணவன் வெளியே செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றான். வெகுநேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. அவனை பல இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். எனினும் மாணவன் கிடைக்கவில்லை.
பின்னர் இரவு 11 மணிக்கு மாணவனின் தாய்க்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். ரூ.1 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். நாங்கள் சொல்கின்ற இடத்தில் பணத்தை கொண்டு வந்து தர வேண்டும் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.
பதறிப்போன பெற்றோர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
மீண்டும் மாணவனின் பெற்றோருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 3 ஆட்டோக்கள் நிற்கின்றன. அதில் நடுவில் உள்ள ஆட்டோவில் பணத்தை வைத்து விட்டு செல்லுங்கள். நாங்கள் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் எனக் கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார் ஒரு பையில் பணம் போல செங்கற்களை அடுக்கி வைத்து அந்த பையை மாணவனின் தந்தையிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கொணவட்டத்தில் நின்ற ஆட்டோவில் அந்த பையை வைத்துவிட்டு சென்றார்.
இதனை மறைந்திருந்து போலீசார் நோட்டமிட்டனர். அப்போது மீண்டும் போனில் பேசிய நபர்கள் நாங்கள் காட்பாடியில் இருக்கிறோம் என்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் குறித்து விசாரணையில் இறங்கினர்.
மாணவனை மடக்கினர்
அதற்குள் மாணவனின் தந்தைக்கு மீண்டும் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியநபர்கள் தற்போது கொணவட்டம் சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் மறைந்திருப்பதாக கூறினர். அங்கு வந்து பணத்தை தருமாறு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் கொடுத்த பையுடன் அவரது பெற்றோர் அங்கு சென்றனர்.
பையை வைத்துவிட்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 7-ம் வகுப்பு மாணவனும் அவனது நண்பர் காட்பாடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனும் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இருந்து சிரித்தபடி வெளியே வந்தனர். அவர்கள் வந்து பையை எடுத்த போது, பதுங்கி இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
கடத்தல் நாடகம்
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மாணவர்கள் கடத்தல் நாடகமாடி போலீசாரை அலைக்கழித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மளிகைக் கடை அதிபரின் மகன் கூறுகையில், எனக்கு செல்போன் வாங்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. எனது பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் வாங்கித் தர மறுத்துவிட்டனர். என் வீட்டில் பணம் அதிகமாக இருப்பது எனக்கு தெரியும். அதனால் எனது நண்பர் மூலம் கடத்தல் நாடகமாடி பணத்தை பறிக்க திட்டமிட்டோம் என்றார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.