தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தேவையற்ற அச்சமோ, குழப்பமோ கொள்ள வேண்டாம்
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேவையற்ற அச்சமோ, குழப்பமோ கொள்ள வேண்டாம் என்று மனநல மருத்துவர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியினை தொடரலாம். தோல்வியினால் தேவையற்ற அச்சமோ, குழப்பமோ, பயமோ கொள்ள வேண்டாம். தேர்வில் தோல்வி அடைந்ததால் உங்களின் எதிர்காலம் முடிந்து விட்டதாக கருத வேண்டாம்.
படித்துவரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனி திறமை உண்டு. அந்த திறமைகளை கண்டறிந்து முறையாக பயன்படுத்தினால் அனைவரின் எதிர்காலமும் வளமானதாக இருக்கும்.தேர்வாகதவர்கள் எவரும் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம்.
தேர்ச்சி பெறாத மாணவா்களுக்கு தேவையற்ற அச்சமோ, குழப்பமோ, பயம் ஏதும் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை ஏதும் தேவைப்பட்டால் கட்டணம் இல்லா தொலைபேசி எண்களான 104, 14416, 14417 மற்றும் மாவட்ட மனநல ஆலோசனை மைய எண் 6383744618, மாவட்ட மனநல மருத்துவர் விஜயராகவன்-9443109680 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.