ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
திருவண்ணாமலை
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை பின் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, நகராட்சி நிதியுதவி, சுய நிதி, தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 2545 பள்ளிகள் உள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான பணியாளர்கள் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கரும்பலகைகள், மேஜைகள் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகியது.
காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாட வேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு அதற்கான அட்டவணையை கல்வித் துறையின் மூலம் தயார் செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
பள்ளி வகுப்புகள் தொடக்க நாளை முன்னிட்டு இன்று காலை மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகளில் அவர்கள் தங்களின் நண்பர்களை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் விடுமுறை நாட்களில் நடந்த சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளைபகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் விடுமுறை நாட்களில் என்னென்ன செய்தீர்கள் என்று கேட்டறிந்தார். பின்னர் அவர் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கி பள்ளியில் வகுப்பறைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
சந்தனம், பொட்டு வைத்து வரவேற்பு
திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பிரேமா தலைமையிலான ஆசிரியர்கள் சந்தனம், பொட்டு வைத்து வரவேற்றனர்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இனாம்காரியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குழு உறுப்பினர் வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் விலையில்லா பாட நூல் வழங்கினார்.