மாவட்டத்தில் 777 பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. பள்ளி வந்த மாணவர்களுக்கு மலர்கள், இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் நடந்த விழாவில் மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
பள்ளிகள் திறப்பு
6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், ஓசூர், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், கிருஷ்ணகிரி, மத்தூர், சூளகிரி, தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி ஆகிய 10 வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நடுநிலைப்பள்ளிகள் 327, அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளிகள் 229, அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 221 என மொத்தம் 777 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ரோஜா மலர்கள், இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, சீனிவாசன், ஜெயக்குமார், சுதா சந்தோஷ், தி.மு.க. நிர்வாகிகள் திருமலை, கனல் சுப்பிரமணி, ஜான் டேவிட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், சீருடைகள் வழங்கபட்டன.
ஓசூர்
ஓசூர் அருகே பேடரப்பள்ளி மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவியர் உற்சாகமாக வந்தனர். அவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர் அன்னைய்யா, மாநகராட்சி கவுன்சிலர் ரஜினிகாந்த், பெற்றோர், ஆசிரியர் கழக செயலாளர் ரமேஷ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பொன்.நாகேஷ் ஆகியோர் பூ மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
பின்னர், மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாராயண ரெட்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லக்கப்பா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மஞ்சுளா, நிர்வாகிகள் செல்லப்பா, லோகேஷ், சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி நுழைவாயில் முன்பு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.