படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள்

கூத்தாநல்லூர் அருகே போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவா்கள் பயணம் செய்கிறாா்கள். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-05 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவா்கள் பயணம் செய்கிறாா்கள். இதை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் கூட்டம்

கூத்தாநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பண்டுதக்குடி, காடுவெட்டி, நாகங்குடி, பழையனூர், புனவாசல், வடபாதிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாலை நேரத்தில் வகுப்புகள் நிறைவடைந்ததும் கூத்தாநல்லூர் கமாலியா தெரு பஸ் நிறுத்தம், பாய்க்காரத்தெரு பாலம் பஸ் நிறுத்தம், பெரியக்கடைத்தெரு பஸ் நிறுத்தம், ரேடியோ பார்க் பஸ் நிறுத்தங்களில் பயணிகளை விட, பள்ளி மாணவ- மாணவிகள் அதிகளவில் நிற்கின்றனர்.

அபாய நிலை

வகுப்புகள் நிறைவு பெற்ற பின்பு, நீண்ட நேரத்துக்கு பிறகு கூத்தாநல்லூர் வழியாக, சேந்தங்குடி வரை செல்லக்கூடிய அரசு பஸ் வந்து, அந்தந்த பஸ் நிறுத்தங்களில் நிற்கும் போது, ஏற்கனவே, கூட்டமாக உள்ள அந்த பஸ்சில் ஏற முடியாமல் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

இதனால் அதிகமாக பஸ்சில் கூட்டம் இருப்பதால், பஸ்சின் உட்பகுதிக்கு ஏறி செல்லமுடியாமல், படிக்கட்டுகளில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்லும் அபாய நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒரு படிக்கட்டில் ஒன்பது மாணவர்கள் வரை நிற்பதால், பலம் இழந்த படிக்கட்டுகள் உடைந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கூடுதல் பஸ்கள்

குறிப்பாக படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள், பஸ்சின் வெளிப்புறத்தில் இருப்பதால், சாலையோரங்களில் உள்ள மின் கம்பம் மற்றும் வாகனங்கள் மீது, மாணவர்கள் மோதி உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் செல்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோாிக்்கை விடுத்துள்ளனார். 

Tags:    

மேலும் செய்திகள்