பரிசலில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவ-மாணவிகள்

பரிசலில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவ-மாணவிகள்

Update: 2023-08-10 22:18 GMT



அந்தியூர் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளான விவசாய பணிக்கும், மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கும் ஈரோடு, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் அம்மாபாளையத்தில் இருந்து கீழ்வாணிக்கு செல்ல வேண்டும். அம்மாபாளையத்தில் இருந்து கீழ்வாணிக்கு 7 கி.மீ. தூரமாகும். பவானி ஆற்றில் பயணித்தால் கீழ்வாணிக்கு 500 மீட்டர் தூரம் தான். சீக்கிரம் சென்றுவிடலாம். ஆனால் அம்மாபாளையம்-கீழ்வாணி இடையே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை. இதனால் அம்மாபாளையத்தில் இருந்து ஆற்றில் பரிசலில் பயணித்து அக்கரையில் உள்ள கீழ்வாணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி மேற்கூறிய ஊர்களுக்கு தங்களது பணிகளுக்கும், படிப்புக்கும் செல்வார்கள்.

மழை பெய்யும்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது மக்கள் பரிசலில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். மேலும் குறித்த நேரத்துக்கு முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து தரப்பு மக்களின் சிரமங்களை போக்குவதற்காக அம்மாபாளையம்-கீழ்வாணி இடையே பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

500 மீட்டர் தூரம்

கீழ்வாணியை சேர்ந்த கே.எஸ்.மோகன்குமார்:-

அம்மாபாளையம் பகுதியில் இருந்து காலை நேரத்தில் ஈரோடு, அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். பவானி ஆற்றில் பரிசலில் பயணித்தால் கீழ்வாணிக்கு 500 மீட்டர் தூரம் தான். எனவே பரிசலை பயன்படுத்தி பள்ளிக்கூடம், கல்லூரிக்கு சென்று வருவார்கள். அதேபோல அரசு அதிகாரிகளும் ஆபத்தை அறியாமல் இந்த பரிசலை பயன்படுத்தி வருகின்றனர். உடனே அம்மாபாளையத்துக்கும், கீழ்வாணிக்கும் இடையே பாலம் அமைத்துக் கொடுத்தால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நேரம் விரையம்

அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள்:-

எங்கள் கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வேலைக்காகவும் படிப்பதற்காகவும், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் அந்தியூர், பவானி பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதற்காக அம்மாபாளையத்தில் இருந்து கீழ்வாணிக்கு 7 கிலோமீட்டர் சுற்றி செல்லும் போது நேரம் விரயமாகிறது. விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் போது லாரிக்கு கொடுக்க வேண்டிய வாடகை அதிகமாகின்றன. எனவே கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.

ஆபத்து

அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்.என்.ராமலிங்கம்:-

எங்கள் பகுதியில் இருந்து தினமும் 2 ஆயிரம் பேர் தங்கள் கிராமத்தில் இருந்து வேலைக்காகவும், படிப்பதற்காகவும் உட்பட பல்வேறு பணிகளுக்காக வெளியே சென்று வருகின்றனர். அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு பரிசலை பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீர் அதிகமாக செல்லும் காலங்களில் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே கிராம மக்களின் தேவைகளில் ஒன்றான ஆற்றுப்பாலத்தை கட்டி கொடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுப்பார்களா?

அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜி.வெங்கடாசலம்:-

எங்கள் கிராம மக்கள் அனைவருமே அடிப்படை தேவைக்காக அந்தியூர், பவானி, அத்தாணி, ஆப்பக்கூடல் சென்று வருகின்றனர். ஆற்றில் குறைவான தண்ணீர் ஓடும் போது நாங்கள் பரிசலை பயன்படுத்தி மறுகரையில் உள்ள கீழ்வாணிக்கு சென்று அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வோம். மழை காலங்களிலும், பவானிசாகர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடும் போதும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடும்.

அப்போது பரிசலில் செல்லாமல் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கீழ்வாணி சென்று அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்கிறோம். சுமார் 500 மீட்டர் தூரத்தை கடப்பதற்காக 7 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவே வெளியூர்களுக்கு எங்கள் தேவைக்காக விரைவாக செல்லும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும். இது எங்களின் 50 ஆண்டுகள் கால கோரிக்கை. உடனே அதனை நிறைவேற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்