படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; தட்டிக்கேட்ட டிரைவர் மீது தாக்குதல்
அன்னவாசல் அருகே படிக்கட்டில் பயணித்த மாணவர்களை மேலே வர சொன்ன அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்துக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னவாசல்:
அரசு பஸ்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பணிமனையிலிருந்து அன்னவாசல் வழியாக இலுப்பூருக்கு அரசு டவுன் பஸ் வழக்கம் போல நேற்று மாலை சென்றது. அந்த பஸ்சை மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 38) என்பவர் ஓட்டினார். கன்டக்டராக குருக்களையாப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன் (40) என்பவர் இருந்தார். புதுக்கோட்டை அருங்காட்சியகம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் ஏறினர்.
டிரைவர் மீது தாக்குதல்
அப்போது மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனைப்பார்த்த டிரைவர் சரவணன், கண்டக்டர் மணிவண்ணன் ஆகியோர் மாணவர்களை மேலே ஏறி வருமாறு கூறினர். இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் மாணவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ் அன்னவாசலை கடந்து செல்லும் போது மாணவர் ஒருவர் செங்கப்பட்டி என்னும் இடத்தில் வைத்து டிரைவரை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதையடுத்து பஸ்சை டிரைவர் மற்றும் கண்டக்டர்ஆகியோர் செங்கப்பட்டி சாலையில் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் ஊழியர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஸ்சை சாலையில், ஓரமாக நிறுத்த செய்தனர். பின்னர் டிரைவரை தாக்கிய மாணவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.