பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி

நாமக்கல்லில் நேற்று முன்தினம் இரவு அதிகபட்சமாக 108 மி.மீட்டர் மழைபதிவானது. இதனால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-30 18:04 GMT

108 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. அதிகபட்சமாக நாமக்கல் நகரில் 108 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

நாமக்கல்-108, எருமப்பட்டி-80, கொல்லிமலை-70. கலெக்டர் அலுவலகம்-65, சேந்தமங்கலம்-63, மோகனூர்-38, பரமத்திவேலூர்-27, மங்களபுரம்-18, புதுச்சத்திரம்-17, திருச்செங்கோடு-5, ராசிபுரம்-5, குமாரபாளையம்-3. மாவட்டத்தின் மொத்தமழை அளவு 499 மி.மீட்டர் ஆகும்.

பள்ளி வளாகத்தில் மழைநீர்

இந்த மழையின் காரணமாக நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் நேற்று காலையில் வயல்வெளிகளில் பயிர்களை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் வரத்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து இருப்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கியது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பள்ளி உள்ளே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதையடுத்து மோட்டார் வைத்து மழைநீரை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக பள்ளியின் வளாகத்தில் மண் கொட்டி மழைநீர் தேங்காய் வண்ணம் தண்ணீர் வெளியேற்ற வசதி செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேந்தமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை சேந்தமங்கலம் அருகே உள்ள வேட்டாம்பாடியில் இருந்து வீசானம் செல்லும் சாலையில் ஓடிய மழைநீரில் ஒரு ஜீப் சிக்கியது.

Tags:    

மேலும் செய்திகள்