மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாக மாணவர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு கலைக்கல்லூரி
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி உள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி நடைபெற இருந்த இளநிலை பட்டப்படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக வருகை தந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இளநிலை பாட பிரிவுகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விடுபட்டவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று மாணவர்கள் பலர் நேற்று அவரது பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தனர்.
மதியம் வரை காத்திருந்த அவர்கள் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்காக கலந்தாய்வு முடிவுற்று, அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டது என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
சாலை மறியல்
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரி முன்பு உள்ள செங்கம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், 3-ம் கட்ட கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அல்லது நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளித்தால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கலந்தாய்விற்காக வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் நேற்று இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி தொடர்ந்து பரபரப்பாகவே காணப்பட்டது.