மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்

திட்டச்சேரி அருகே மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-13 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி அருகே மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த வகுப்பறைகள்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டிடங்கள் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

கட்டிடங்கள் இடித்து அகற்றம்

இதை தொடர்ந்து சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் இடித்த வகுப்பறை கட்டிடங்களுக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரவில்லை.

இடித்து அகற்றப்பட்ட வகுப்பறைகளுக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தும். இதுவரை எந்ததவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

இதன் காரணமாக போதிய இடவசதி இன்றி மாண-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அவலநிலை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மரத்தடியின் தரையில் அமர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது.

மழை காலங்களில் மரத்தடியில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுவதால் பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இனியும் தாமதிக்காமல் மாணவர்களின் கல்வி நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்