மாணவர்கள் தங்களை போட்டித்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்
கசிநாயக்கன்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்கள் விடுதியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் தங்களை போட்டித்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறினார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று இரவு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் மற்றும் மாணவர்கள் தங்கும் அறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கல்லூரி மாணவர்களுடன் இரவு உணவு சாப்பிட்டார்
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது விடுதியில் மாணவர்கள் நாள்தோறும் செய்யக்கூடிய பணிகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் தனித்தனி குழுவாக அமர்ந்து நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்து நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
போட்டித்தேர்வுக்கு
விளையாட்டு வீரர்கள் போட்டியில் தோல்வி அடைந்தாலும் போட்டி, பொறாமை இல்லாமல் நட்புடன் பழக வாய்ப்பு ஏற்படும். புத்தகம் வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள நூலகங்களில் உறுப்பினராக சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வெற்றி பெற்று எதிர்காலத்தில் அரசுத்துறை அலுவலராகவோ, ராணுவ வீரராகவோ, வங்கி பணியாளராகவோ தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் நலன் கருதி அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் தமிழக முதல்-அமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அரசு வழங்கும் இந்த வசதிகளை பயன்படுத்தி மணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். தாய், தந்தைக்கும், தாங்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், விடுதி காப்பாளர் மற்றும் சமையல் பணியாளர்கள் உடன் இருந்தனர்.