போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது
வாழ்க்கையை பாதிக்கும் போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
வாழ்க்கையை பாதிக்கும் போதை பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் அண்ணா காலனி, நெய்விளக்கு தோப்பு ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்க்கை சிரழியும்
போதை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். குற்ற சம்பவங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் போதை பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். தற்போது மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது.
கல்வி கற்கின்ற பருவத்தில் போதை பொருட்களுக்கு அடிமையானால் வாழ்க்கை சீரழியும். எனவே இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.