மாணவ- மாணவிகள் மன தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்
அவமானங்கள், தோல்விகள், சவால்களை மாணவ- மாணவிகள் மன தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுரை கூறினார்.
அவமானங்கள், தோல்விகள், சவால்களை மாணவ- மாணவிகள் மன தைரியத்துடன் எதிர் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுரை கூறினார்.
வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
இன்றைய நவீன சூழலில் கல்லூரியில் படித்த மாணவ -மாணவிகள் அனைவருக்கும் அரசு வேலை மற்றும் தனியார் வேலைகள் வழங்குவது என்பது கடினமானது.
ஒவ்வொருவருக்கும் தகுதியின் அடிப்படையிலேயே வேலைகள் கிடைக்கின்றன.
மாணவ- மாணவிகள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
படிப்பு முடித்த பின்பு எந்த வேலைவாய்ப்பை நாடலாம். போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற தமிழ்நாடு முதல்-அமைச்சர் வாழ்க்கை வழிகாட்டி என்ற நிகழ்ச்சியை தொடங்கி அதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
எதிர்கொள்ள வேண்டும்
இன்றைய சூழலில் பல்வேறு துறைகளுக்கு செல்ல தனித்தனியே படிப்புகள் உள்ளன. நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப்புற பிள்ளைகள் மன உறுதியுடன் இருந்தால் நல்ல தொழிலையோ வேலை வாய்ப்பையோ பெறலாம்.
மாணவ- மாணவிகள் அவமானங்கள், தோல்விகள், சவால்களை மன தைரியத்துடன் எதிர் கொண்டு துவண்டு விடாமல் மேன்மையடைய வேண்டும்.
நமக்கு தேவையான இலக்கை அடைய நமது அறிவையும், ஆற்றலையும் பட்டை தீட்டி வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுக்கு உள்ள சந்தேகங்களையும் மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களையும் கேட்டறிந்து நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முரளி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் கோமதி, உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் மற்றும் மாணவ- மாணவிகள், விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.