அறிவியல்-கணிதத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்
அறிவியல்-கணிதத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்
வானவில் மன்ற திட்டத்தை பயன்படுத்தி அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டு்ம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
வானவில் மன்றம் தொடக்கம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான "வானவில் மன்றம்" திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதற்கான "வானவில் மன்றம்" தொடக்க விழா மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனபான்மையினை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியே இவ்வானவில் மன்றம் திட்டம். அரசுப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தினை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே வானவில் மன்றத்தின் நோக்கமாகும்.
26 ஆயிரத்து 377 மாணவர்கள் பயன்பெறுவர்
ஒவ்வொரு அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்காக இவ்வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக அறிவியல் மற்றும் கணிதத்தில் திறன்மிக்க கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்தாளர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பாடத்தில் கடினப்பகுதிகளை எளிய செய்முறைகள் மூலம் பள்ளி ஆசிரியருடன் இணைந்து பல்வேறு செய்முறைகளை செய்துகாட்டி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தி கற்கும் அனுபவத்தை மாணவர்களுக்கு மேம்படுத்துவார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள 26 ஆயிரத்து 377 மாணவர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள இவ்வானவில் மன்றம் திட்டத்தினை பயன்படுத்தி கொண்டு அறிவியல் மற்றும் கணிதத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலூன்களை பறக்கவிட்ட கலெக்டர்
முன்னதாக மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுடன் பலூன்களை பறக்கவிட்டனர்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி மாயகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ் பாவை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.