தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி:மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து பயணிக்க வேண்டும் கலெக்டர் பி.குமாரவேல் பாண்டியன் பேச்சு

மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் பி.குமாரவேல்பாண்டியன் கூறினார்.

Update: 2023-04-11 17:18 GMT

வெற்றி நிச்சயம்

பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறுவது எப்படி என்பதை மாணவர்களே அறிந்து கொள்வதற்கு வசதியாக 'வெற்றி நிச்சயம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தினத்தந்தி நாளிதழ் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று நடத்தப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வி.ஐ.டி. வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'கல்விப்பணியில் தினத்தந்தி' என்ற தலைப்பில் தினத்தந்தி தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ஆர்.தனஞ்செயன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் பி.குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வெற்றியாளர்

தினத்தந்தி-வி.ஐ.டி. இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் ஒரு சிறப்பான நிகழ்ச்சி. மாணவர்கள் தங்கள் மனதில் வெற்றியை மட்டும் பதிய வைத்து கொள்ள வேண்டும். விளையாட்டில் மட்டும் தான் ஒருவர் வெற்றி பெற்றால் மற்றொருவர் தோல்வி அடைவார். ஆனால் வாழ்க்கையில் அப்படி கிடையாது. வெற்றி மட்டுமே தாரக மந்திரமாக இருக்க வேண்டும். வெற்றி என்பது நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்கிறீர்கள்? என்பதை அடிப்படையாக கொண்டது. சொந்த வாழ்வை சிறப்பாக அமைத்து கொண்டால் நீண்டகாலம் வெற்றியாளராக வலம் வர முடியும்.

இலக்கை தீர்மானித்து...

20 வயதுக்கு மேல் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் வடிவமைக்கும் காலம். இந்த காலக்கட்டத்தில் உங்கள் குறிக்கோள்களை நோக்கி செல்ல வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த ஒழுக்கம் உங்களுடன் பயணிக்க ஆரம்பித்துவிடும். ஒழுக்கத்துடன் இருந்தால் நீங்கள் நினைத்த இலக்கை அடைந்து விடலாம். தனிமையில் எப்போதும் ஒழுக்கம், நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். நேர்மையை கடைப்பிடித்தால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. செய்யும் செயல் தெளிவாகவும், ஒழுக்கமாகவும் இருப்பின் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம்.

மாணவ-மாணவிகள் இலக்கை தீர்மானித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். அதை அடைந்தால் நன்று. அதை அடையாவிட்டால் தோல்வி என்று நினைக்காமல் அடுத்த இலக்கை அடைவதற்கான அனுபவமாக இருக்கும் என்று நினைக்க வேண்டும்.

நாம் ஈட்டும் பணம் நேர்மையான வழியில் இருக்க வேண்டும். மாணவர்கள் உழைப்பதற்கு தயங்க கூடாது. உழைப்பே உயர்வு தரும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து பொறியியல்துறை என்ற தலைப்பில் வி.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை டீன் கே.ரமேஷ்பாபு, மருத்துவத்துறை மற்றும் நீட் நுழைவுத்தேர்வு என்ற தலைப்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்வியாளர் ஆர்.காயத்ரி, போட்டித்தேர்வுகளும், வேலைவாய்ப்பும் என்ற தலைப்பில் கோவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குனர் எம்.கருணாகரன், கலை மற்றும் அறிவியல் என்ற தலைப்பில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் க.கீதா, சட்டத்துறை என்ற தலைப்பில் சேலம் சட்ட கல்வியாளர் வக்கீல் பி.ஆர்.ஜெயராஜன், வேளாண்மைத்துறை என்ற தலைப்பில் வி.ஐ.டி. வேளாண்மைத்துறை பேராசிரியர் எஸ்.பாபு, கேட்டரிங் டெக்னாலஜி என்ற தலைப்பில் வி.ஐ.டி. கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆலோசகர் எஸ்.முத்தானந்தம், பட்டய கணக்கியல் என்ற தலைப்பில் மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் வேலூர் தினத்தந்தி மேலாளர் ஏ.கனகராஜா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். மதிய உணவு இடைவேளையின்போது நன்னிலம் கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்