மாணவர்கள் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்

சோளிங்கர் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-08-24 19:01 GMT

சோளிங்கரில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவர்கள் இருபிரிவாக பிரிந்து முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பிலும் 12 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி போலீஸ் நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், கூடுதல் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யாவிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தனது செல்போனில் அம்பேத்கர் புகைப்படத்தை வைத்திருந்ததால்தான் சண்டை உருவாகியுள்ளது. எனவே மோதலுக்கான காரணத்தை தீவிரமாக விசாரணை செய்து, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒருதலைபட்சமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மண்டல துணைச் செயலாளர் தமிழ், வெற்றிவளவன், முன்னாள் மண்டல செயலாளர் ரத்தினநற்குமரன், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் சசிகுமார், துரை நன்மாறன் ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா, துணை செயலாளர் சுரேஷ், மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன், பெல் சேகர், அருளீஸ்வரன், ராஜா, சோளிங்கர் பொறுப்பாளர்கள் காமு, கவியரசன், சவுந்தர் சிசு பாலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்