தனியார் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

குழம்பில் புழு கிடந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்து தகாத வார்த்தை பேசிய தனியார் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-14 18:45 GMT

குழம்பில் புழு கிடந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்து தகாத வார்த்தை பேசிய தனியார் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரத்தில் சக்தி என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு 320 மாணவர்கள், 70 மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நேற்று மதியம் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவர்கள் குவிந்தனர்.

பின்னர அவர்கள், கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கடந்த 10-ந் தேதி மதியம் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கிய தட்டப்பயிறு குழம்பில் புழு இருந்து உள்ளது.

இது பற்றி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரசாந்த் (வயது20) மற்றும் காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் ஆகியோர் கல்லூரி முதல்வர் பால் பிரபுவிடம் கேட்டு உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். அவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி சேர்மன் தர்மலிங்கம் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், மாதம் ஒருமுறை நானும், தாளாளர் கார்த்திகேயனும் கூட்டம் நடத்தி மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், உரிய விசாரணை நடத்தி கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று 2 மணிநேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகள் கல்லூரிக்குள் சென்றனர். 

மேலும் செய்திகள்