பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் மறியல்

அரியலூரில் பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-10-06 17:42 GMT

பஸ் நிலையம்

அரியலூர் பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் நின்று பஸ்களில் ஏறி பயணித்து வருகின்றனர். தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மக்கள் அங்கு சென்று பயணிப்பது இல்லை. இந்நிலையில் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் முடிந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் வரவில்லை என கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரமாக விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ்கள் வராததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

2 மணி நேரம் காத்திருப்பு

இந்நிலையில், மாணவர்கள் பஸ் வராததை கண்டித்து சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் மற்ற பஸ்கள் செல்ல முடியாமல் சாலையின் நடுவே நின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையறிந்த போலீசார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த கிராமங்களுக்கு பஸ் இயக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்சில் ஏறி பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் தங்களது கிராமங்களுக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்