படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்
படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பஸ் டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பஸ் டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
விழிப்புணர்வு
வேலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிக அளவிலான புகாரங்கள் உள்ளன. அதைத்தொடர்ந்து வேலூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் தனியார் பஸ் மட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பஸ்களும் இயக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அரசு பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
டிரைவர்கள் அதிகாலையிலேயே பணிக்கு வந்து, பின்னர் பஸ்களை பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கொணவட்டத்தில் உள்ள பணிமனையில் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது போலீசார் கூறியதாவது:-
படிக்கட்டில் தொங்கியபடி...
போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பஸ்களை இயக்கக் கூடாது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் முன்பு உள்ள பேரிகார்டுக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும். பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நிறுத்த கூடாது.
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இதை தடுக்க வேண்டும். மேலும் அனைத்து பஸ் நிறுத்தத்திலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். முறையாக பஸ்கள் நிறுத்துவதில்லை என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தற்போது அபராத கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிதாக உயர்த்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணம் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டோ டிரைவர்களுக்கும், இருசக்கர வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வினியோகம் செய்ய உள்ளனர்.