போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாணவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் பேச்சு

போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாணவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2022-08-11 22:42 GMT


விழிப்புணர்வு உறுதிமொழி

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாணவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். அதே போன்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருட்களை பயன்படுத்தாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பேச்சுப்போட்டி

எவ்வளவு படித்து உயர்ந்த நிலையை அடைந்தாலும், அதிகமான சொத்துகளை சேர்த்தாலும், போதைப்பழக்கம் ஒருவருக்கு இருந்தால் இவை அனைத்தும் அவர்களை விட்டு நீங்கிவிடும். இதனால் அவர்களது குடும்பம் மீளாத்துயரத்தில் சென்று விடும். சுயமான சிந்தனை, சக்தியை முற்றிலும் அழிக்கக்கூடிய தன்மை போதைப்பொருட்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலும் அகற்றும் வகையில், படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கட்டுரை, ஓவியம், வினாடி-வினா மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்