ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 கல்லூரி மாணவர்கள் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது 2 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்லூரி மாணவர்கள்
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 21). பாலக்கோடு அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் அதியமான்கோட்டை அடுத்த ஆத்துகொட்டாய் பகுதியை சேர்ந்த முல்லைவேந்தன் மகன் தனுஷ் (19).
இவர் ஆட்டுக்காரம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வந்தார். இவர்கள் 2 ேபர் மற்றும் சாமுவேல் என்பவர் என 3 பேர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது ஒகேனக்கல் சென்றனர்.
தேடும் பணி தீவிரம்
அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்துவிட்டு பின்னர் ஆலம்பாடி புளியந்தோப்பு காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர்.
இதுதொடர்பாக மற்றொரு நண்பர் சாமுவேல் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் தனுஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.