மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயிலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ-மாணவிகள் நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2022-23-ம் கல்வியாண்டில் புதிததாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ-மாணவிகள் சென்னை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தையோ அணுகலாம். இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு வருகிற ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.