பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விடுதிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்; பள்ளி மாணவ, மாணவிகளுக்காக 30 பள்ளி விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக 4 அரசு கல்லுரி விடுதிகள் ஆக மொத்தம் 34 விடுதிகள் அனைத்து தாலுகாக்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகிளல் தினசரி நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் மற்றும் 1 ஆங்கில நாளிதழ்கள் நூலகப் புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கானபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. 4 -ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படுகிறது.10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகிறது.
அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும், காற்றோட்டத்துடன் கூடிய தங்குமிடம் மற்றும் இறைச்சி, முட்டையுடன் கூடிய சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. விடுதிகளில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள், நீர் சுத்திகரிப்பு கருவி, புத்தக அலமாரி, இன்வெர்ட்டர் கருவி, இரண்டடுக்கு கட்டில்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாய்கள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு ஜமக்காளம் மற்றும் போர்வை வழங்கப்படுகிறது.
பள்ளி விடுதிகள் தூத்துக்குடி, கழுகுமலை, கோவில்பட்டி, காயாமொழி, நாலுமாவடி, வெள்ளாளன்விளை, கீழராமசாமிபுரம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், வீரபாண்டியபட்டினம், மணப்பாடு, பணிக்கநாடார்குடியிருப்பு, விளாத்திகுளம், கே.தங்கம்மாள்புரம், புதூர், சாத்தான்குளம், கொம்மடிக்கோட்டை, ஆனந்தபுரம், படுக்கப்பத்து, கருங்குளம், எட்டயபுரம், சுப்பம்மாள்புரம், ஓட்டப்பிடாரம், பெரியசாமிபுரம் மற்றும் கயத்தார் பகுதிகளில் இயங்குகின்றன. கல்லூரி விடுதிகள் தூத்துக்குடி போல்டன்புரம், தாளமுத்துநகர், கோவில்பட்டி, நாகம்பட்டி ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.
தகுதிகள்
பள்ளி விடுதிகளில் சேர 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தகுதி உயைவர்கள் ஆவர். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்துக்கு 8 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். (மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது)
இந்த விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமோ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலவலகத்திலோ கட்டணமின்றி பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளுக்கு 30.06.23 வரையும், கல்லூரி விடுதிகளுக்கு 31.0723 வரையும் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவிகள் விடுதியில் சேரும் போது, சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் கட்டாயம் அளிக்கபபட வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்தநேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
எனவே, வறுமைநிலையில் வசிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி இடைநிற்றலை தவிர்த்து அரசின் சலுகைகளை அனுபவித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இதற்கு பெற்றோர், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.