வகுப்பறைகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு உற்சாகமாக வந்தனர். மாணவர்களை கும்பமரியாதையுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு உற்சாகமாக வந்தனர். மாணவர்களை கும்பமரியாதையுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வெயில் சுட்டெரித்ததால் பள்ளி திறப்பு தேதி 2 முறை மாற்றி அமைக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.கும்பகோணம் பகுதியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விடுமுறையில் இருந்த மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்கு உற்சாகமுடன் வந்தனர். ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கும்ப மரியாதையுடன் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்து கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு சென்றது குறித்து விவாதித்து கொண்டனர்.
பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வகுப்பறையில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
நீதி போதனைகள்
இதே போல் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு தேசப்பற்று, தேச ஒருமைப்பாடு, கல்வியின் முக்கியத்துவம், இறை பக்தி மற்றும் நீதி போதனைகளை வழங்கி நன்கு படித்து வெற்றி பெற வேண்டும் என மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்தனர்.