பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

திண்டிவனம் அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-19 18:53 GMT

செஞ்சி,

திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இ்ந்த கல்லூரியில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் செஞ்சி பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செஞ்சியில் இருந்து திண்டிவனம் அரசு கல்லூரி வழியாக சென்னை செல்லும் அரசு விரைவு பஸ்சில் ஏறினர். பஸ் வல்லம் அருகே சென்றபோது, கண்டக்டர், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காது என்று மாணவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் வல்லம் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றது. அதில் இருந்து இறங்கிய மாணவர்கள் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பஸ் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கண்டக்டரிடம் போலீசார் பேசி, கல்லூரி நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லுமாறு வலியுறுத்தினர். அதற்கு கண்டக்டர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சில் ஏறினர். அதன் பின்னர் அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்