கோத்தகிரி
கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று மாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன், சேகர் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பேரணியானது ராம்சந்த் சதுக்கம், காந்தி மைதானம் சாலை, மார்க்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் விழிப்புணர்வு டி-சர்ட் மற்றும் தொப்பிகளை அணிந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து வாகன ஓட்டிகள் 10 பேருக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவசமாக ஹெல்மெட் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.