போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-10-14 18:59 GMT

ஆசிரியர் போக்சோவில் கைது

கரூர் அருகே உள்ள புலியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த தற்கொலை முயற்சி குறித்து அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, தான் படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் பாபு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்ெகாலைக்கு முயன்றேன் என்று கூறி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வழக்கம்போல் வந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து கொண்டு, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாபு மீது மாணவி பொய் புகார் அளித்து இருப்பதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறி தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், முறையான மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்