சாலை வசதி கோரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தர்ணா
சாலை வசதி கோரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் புலியூர், செட்டியப்பட்டி ஊராட்சியை சேர்ந்த புரவிக்காடு, ரெகுநாதபுரம், கலரிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். புலியூர் முதல் செட்டியப்பட்டி வரை 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள இச்சாலையானது 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும், பஸ் வசதி இல்லை எனவும் இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாவும், சாலை வசதி கோரியும், பஸ் வசதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
384 மனுக்கள்
தர்ணாவில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையுடன் வந்திருந்தனர். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களது பெற்றோர் மற்றும் பொதுமக்களுடன் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். இந்த நிலையில் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க முக்கிய நபர்கள் மட்டும் செல்லும்படி போலீசார் மற்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் கலெக்டரை சந்திக்க அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மெர்சி ரம்யா உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
மீனவர்களுக்கு நிவாரண உதவி
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுகள், இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.5 லட்சம் வீதம் 8 மீனவர்களுக்கு மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.1 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பில் நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.