மாநில கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி: செல்லியம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் பாலக்கோடு அருகே செல்லியம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் சாதனை மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளி மைதானத்தில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் உருவப்படம் அடங்கிய கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பிரான்சிஸ் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெஞ்சமின் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.