அரசு சுவர் இடிந்து விழுந்ததில் கால்கள் முறிந்த மாணவி, கலெக்டரிடம் மனு
அரசு சுவர் இடிந்து விழுந்து கால்கள் முறிந்த மாணவி, நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அரசு சுவர் இடிந்து விழுந்து கால்கள் முறிந்த மாணவி, நிவாரணம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மாணவி கால்கள் முறிவு
ஆண்டிப்பட்டி அருகே முத்துசங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகள் ரூபிகா (வயது 14). இவர், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த ஊரில் சாலை பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொண்டது தொடர்பாக பணிகள் மற்றும் திட்டத்தை விளக்கும் வகையில் 5 அடி உயரத்தில் விளம்பர சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.
கடந்த மாதம் 15-ந்தேதி அந்த அரசு விளம்பர சுவர் இடிந்து விழுந்ததில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரூபிகாவின் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மாணவியின் இரு கால்களிலும் கட்டுப் போடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.
நிவாரணம் கேட்டு மனு
இந்தநிலையில், மாணவி ரூபிகா ஒரு காரில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். அவருடன் இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் வந்தனர். கலெக்டர் அலுவலக கூட்டரங்கு வெளியே காரை நிறுத்திவிட்டு மாணவியை காரில் வைத்துவிட்டு, அவருடன் வந்தவர்கள் கலெக்டர் ஷஜீவனாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தரமற்ற வகையில் சுவர் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கூறினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். கால்கள் முறிந்த மாணவியை மனு கொடுப்பதற்காக காரில் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.