மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-21 18:45 GMT

கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காலை. மாலை என சுழற்சி முறையில் படித்து வருகின்றனர். இதில் பொது நிர்வாக துறையில் 3-ம் ஆண்டில் 76 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் சமீபத்தில் 4-வது செமஸ்டர் தேர்வில் 7 பாடங்கள் எழுதினர். அதில் 3 பாடங்களுக்கு இது வரை தேர்வு முடிவுகள் வரவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தேர்ச்சி பெறவில்லை என்று வந்துள்ளது.

இதை அறிந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அவர்கள் கூறுகையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்களுக்கு இது வரை 3 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்கவில்லை. ஆனால் தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வாங்கி விடுகிறார்கள். அதேபோல் எங்களுக்கு பாடம் எடுக்க பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 3 பேராசிரியர்கள் மட்டும் தான் பாடம் எடுக்கிறார்கள். இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும், பேராசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்