1,410 கிலோ எடையுள்ள வேனை, தலைமுடியால் இழுத்து மாணவி சாதனை
பட்டுக்கோட்டையில், 1410 கிலோ எடையுள்ள வேனை தனது தலைமுடியால் இழுத்து அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆஷா. இவர்களுடைய மகள் சம்யுக்தா(வயது 12). இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சம்யுக்தா ஏற்கனவே தனது 8-வது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 46 நொடியில் தனது தலைமுடியால் இழுத்து இந்தியன் ரெக்கார்டு, ஆசியா ரெக்கார்டு செய்துள்ளார்.
தலைமுடியால் இழுத்து சாதனை
இந்தநிலையில் நேற்று காலை மற்றொரு சாதனையை மாணவி சம்யுக்தா நிகழ்த்தினார். மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம் முன்னிலையில் மாணவி சம்யுக்தா, அரசு பெண்கள் பள்ளி அருகில் இருந்து 1,410 கிலோ எடையுள்ள வேனை 110 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 10 வினாடிகளில் தனது தலை முடியால் இழுத்து சாதனை நிகழ்த்தினார்.
இந்தியாவில் குறைந்த வயதில் இந்த சாதனையை செய்த முதல் பெண் சம்யுக்தா என்று உலக ரெக்கார்டு யூனியன் சாதனை நிர்வாகி ஷெரீபா தெரிவித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பாமா, நகர சபை தலைவர் சண்முகப்பிரியா மற்றும் நகரசபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர்.