விக்கிரவாண்டியில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் ரெயில் மோதி சாவு
விக்கிரவாண்டியில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் ரெயில் மோதி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48). ம.தி.மு.க. நகர செயலாளர். இவரது மகன் அஸ்வின் (வயது 17). பிளஸ்-2 பொத்தேர்வு எழுதியிருந்த அஸ்வின், நேற்று வெளியான தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்று இருந்தார். இந்த நிலையில், மாலை 6 மணிக்கு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அஸ்வின் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு வந்து, உடலை பார்த்து கதறி அழுதனர்.
ரெயில் மோதி சாவு
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த செங்கல்பட்டு இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அஸ்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அஸ்வின் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ரெயில், அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.