கார் மோதியதில் மாணவன் படுகாயம்; இருசக்கர வாகனங்கள் சேதம்

ராஜபாளையம் அருகே கார் மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்தான். இருசக்கர வாகனங்கள் சேதமானது.

Update: 2023-04-27 20:28 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே கார் மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்தான். இருசக்கர வாகனங்கள் சேதமானது.

மாணவன் மீது மோதிய கார்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மகன் மார்டின். 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள விலக்கனூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. பின்னர் அதேவேகத்தில் பெட்டிக்கடை அருகே நின்று கொண்டிருந்த மார்டின் மீது மோதியது. இதில் மார்டின் தூக்கி வீசப்பட்டார்.

போக்குவரத்து பாதிப்பு

தலையில் அடிபட்டு கிடந்த மார்டினை அருகில் இருந்தவர்கள் மீட்டு விபத்தை ஏற்படுத்திய காரிலேயே ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது.

இந்தநிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரி மார்டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

சாலையின் இரு புறமும் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி மற்றும் சேத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாரத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்