பள்ளிக்கூட வேனில் இருந்து தவறி விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி சாவு

பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தான். வீட்டில் இருந்து புறப்பட்ட 5 நிமிடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-11-14 21:03 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுடைய மகன்கள் திவாகர் (வயது 13), ஜீவா (3). இதில் திவாகர் பூதப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

மாதையன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். நேரம் சரியில்லை என்று கூறி குதிரைக்கல்மேடு என்ற இடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திவாகர் நாள்தோறும் காலையில் வீட்டின் அருகில் வரும் பள்ளிக்கூட வாகனத்தில் பள்ளிக்கு சென்று வந்தார்.

தவறி வெளியே விழுந்தான்

வழக்கம்போல் நேற்று காலை 7.40 மணி அளவில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே வந்த வேனில் ஏறினான். வேனை அம்மாபேட்டையை சேர்ந்த ராமராஜன் (35) என்பவர் ஓட்டினார். கோவில்பாளையத்தில் உள்ள மற்ற மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக வேன் சென்று கொண்டு இருந்தது.

மாணவன் திவாகர் ஏறிய 5 நிமிடத்தில் கோனேரிப்பட்டி கதவணை மின் நிலைய சோதனை சாவடி அருகே வேன் சென்றுகொண்டு இருந்தது. அப்போது டிரைவர் ராமராஜன் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் முன்பக்க படிக்கட்டு அருகே நின்றுகொண்டு இருந்த திவாகர் தவறி வெளியே விழுந்தான். அப்போது வேனின் பின் சக்கரம் ஏறியதில் அவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

பெற்றோர் கதறல்

பள்ளிக்கு புறப்பட்ட 5 நிமிடத்தில் மகன் இறந்துவிட்டான் என்ற துயர செய்தி கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அலறி அடித்து சென்ற மாதையனும், தங்கமணியும் உன்னை 5 நிமிடத்துக்கு முன்பு உயிரோடு பார்த்தோமேடா.... என்று கூறி கதறி துடித்தனர். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, திவாகர் பயணம் செய்த பள்ளி வேனில் பாதுகாவலர் இல்லை என்று தெரியவந்தது. மேலும் வேனின் கதவும் சாத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்