நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடி சபையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் தாஸ். ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். வீரர். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. மகள் முத்து பைரவியும், இரண்டாவது மகனும் இரட்டை குழந்தைகள் ஆவார்கள். முத்து பைரவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு முத்து பைரவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் முத்து பைரவி தோளில் ஏதோ பூச்சி கடித்துள்ளது. இதனால் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அவர் உடனே அதை தட்டிவிட்டு விட்டார். பின்னர் தந்தையிடம் தன்னை ஏதோ பூச்சி கடித்துவிட்டது என்று கூறி அழுதார். ஆனால் அப்போது முத்து பைரவியை கடித்தது எது என்று தெரியவில்லை. இதனால் சுண்ணாம்பு வைத்துவிட்டு இரவில் முத்து பைரவி தூங்கி விட்டார். மறுநாள் காலையில் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை
சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது முத்து பைரவியை கடித்தது பாம்பு என்று தெரியவந்தது. பாம்பு கடித்து சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு தான் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். பாம்பு கடித்து மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.