கண்மாயில் மூழ்கி மாணவி பலி

கண்மாயில் மூழ்கி மாணவி பலியானார்.

Update: 2023-02-16 20:14 GMT

காரியாபட்டி, 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 35). இவர் கூலி வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மகள் பிரீத்தி (8). தண்டியனேந்தல் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த இவள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பள்ளிக்கு செல்லாமல் பள்ளி சீருடையில் வீட்டில் இருந்துள்ளார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகள் அன்பழகி (4). அங்கன்வாடி செல்லாமல் அவளும் வீட்டில் இருந்து உள்ளாள். தண்டியனேந்தல் கண்மாய் பகுதியில் விளையாடுவதற்காக இவர்கள் இருவரும் சென்றனர். அந்த கண்மாய் பகுதியில் மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த தண்ணீரில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் நீரில் மூழ்கினர்.

இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அங்கிருந்த கருப்பசாமி என்பவர் மீட்டு சிகிச்சைக்காக கல்குறிச்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்த டாக்டர், பிரீத்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து அன்பழகியை மேல் சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரீத்தியின் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்