ஆத்தூர் அருகே பரபரப்பு:கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர் சாவு-ஒரு தலை காதலால் விபரீத முடிவு

ஆத்தூர் அருகே கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர் பரிதாபமாக இறந்தார். ஒரு தலை காதலால் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார்.

Update: 2022-11-28 22:48 GMT

ஆத்தூர்:

ஒருதலை காதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி மங்கம்மாள் நகரை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆஷிஷ் தேவ் (வயது 21). இவர், ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார். அவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் மாணவரை அழைத்து அறிவுரை கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு ஆஷிஷ்தேவ், பேராசிரியர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், இதுபோன்று இனி நடக்க மாட்டேன் என்று உறுதி அளித்ததாகவும் தெரிகிறது.

தாலியுடன் கல்லூரிக்கு வந்தார்

இந்தநிலையில் தாலி கயிறுடன் மாணவர் ஆஷிஷ் தேவ் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது மாணவி கழுத்தில் தாலி கட்ட போவதாக நண்பர்களிடம் ஆஷிஷ் தேவ் கூறி உள்ளார்.

இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் ஆஷிஷ்தேவ் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் கல்லூரிக்கு விரைந்து வருவதை அறிந்த ஆஷிஷ்தேவ், தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் கல்லூரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் சாவு

உடனே அவரை ஆம்புலன்சு மூலம் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆஷிஷ்தேவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உடனே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஒரு தலை காதலால் கல்லூரி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்