பெண்ணாடம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலி
பெண்ணாடம் அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் பலியானாா்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆஷிஷ்குமார் (வயது 14). இவன் வடகரை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஆஷிஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விழுப்புரம்- திருச்சி ரெயில் மார்க்கத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றான்.
அப்போது , அங்கிருந்த ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றான். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஷிஷ்குமார் மீது மோதியது. இதில் அவன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானான்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பலியான ஆஷிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.